நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,393 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிவருகிறது.
அதன் முக்கிய பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் முதலே புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு அமல்படுத்தப்படமாட்டாது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். ஆனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகி வருவதால் விரைவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.