இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சுகேஷ் சந்திர சேகரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 16 சொகுசு கார்கள், 82 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்து இருக்கின்றனர். பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அகில இந்திய அளவில் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய நட்பும் இருப்பதாக கூறி பலரிடம் இவர் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவு பட்டிருந்த காலத்தில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், தினகரனின் நண்பர் மல்லிகா அர்ஜுனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சந்திரசேகர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள சுகேஷ் சந்திர சேகரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது 82 லட்சம் ரூபாய் ரொக்கம், 2 கிலோ தங்கம், 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது பங்களாவுக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.