ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் பகுதிக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாதைகள் அமைக்கும் போது கால்வாய்கள் வழியாக பணிகள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாசன பரப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்பட்டது. இதன் காரணமாக ரயில் பாதை அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நெய்யூர் மற்றும் பேயன்குழி பகுதிகளில் இருக்கும் கால்வாய்களை உடைத்து பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் உள்ள கால்வாய்கள் உடைக்கப்பட்டதால் விவசாயிகள் இருபோக நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே ரயில்வே பாதை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் நடைபெறும் ரயில் பாதை அமைக்கும் பணிகளை பாசனத்துறை தலைவர் வின்சென்ட் ஆண்ட்ரோ, விவசாய சங்க பிரதிநிதிகள் முருகேச பிள்ளை, பத்மதாஸ், புலவர் செல்லப்பா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்