இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் மாவட்டத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில் வைத்து பச்சிளம் குழந்தை ஆட்டோவில் செல்லும்போது தூக்கி வீசப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக நடைபாதையில் விழுந்த குழந்தை உயிர் தப்பியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்ததோடு குழந்தையை வீசி சென்றவரை தேடத் தொடங்கினர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாய் பிந்திபுரோலு கிராமத்தை சேர்ந்த சைலஜா என்பதும் அந்தப் பெண்ணிற்கு 13 வருடங்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் செப்டம்பர் 17ஆம் தேதி இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நிலையில் எடை குறைவாக பிறந்ததால் மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவரும் இரண்டாவது பெண் குழந்தையை வளர்க்க முடியாது கொன்று விடலாம் என கூறியுள்ளார். தாயும் குழந்தை வேண்டாம் என முடிவு செய்ததால் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் ஆட்டோவில் இருந்து குழந்தையை வெளியில் தூக்கி வீசி உள்ளனர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் குழந்தையின் தாயை கைது செய்துள்ளனர்.