மதுரை ரயில் நிலையத்தில் என்ஜின் ரயில் தடம் புரண்டதால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது.
மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழியாக சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து அந்த ரயிலில் மின்சார எஞ்சினுக்கு பதிலாக டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகாலை 4.50 மணிக்கு ரயில் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட்டது.
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான மின்சார எஞ்சினை வழக்கம் போல ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலகம் அருகே நிறுத்துவதற்காக கொண்டு சென்றபொழுது மூன்றாவது மற்றும் நான்காவது பிளாட்பாரங்களுக்கு செல்லும் தண்டவாளங்கள் இணையும் இடத்தில் ரயிலின் இன்ஜினில் இருக்கும் மூன்று சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறியது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு எந்த பிளாட்பாரத்தில் இருந்து எந்த ரயில் புறப்படும் என்ற தகவல் கூற முடியாததால் பயணிகள் குழப்பம் அடைந்தார்கள். இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் கால தாமதமாக புறப்பட்டு சென்றது. இவ்வாறு மதுரை இரயில் நிலையத்தில் தடம் புரளும் சம்பவம் இரண்டாவது முறையாகும் குறிப்பிடத்தக்கது.