சிவகங்கையில் ஒரே மாதிரியாக இரண்டு கார்கள் இருந்ததால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
கடந்த மார்ச் மாதம் பத்தாம் தேதி சிவகங்கையை சேர்ந்த முத்து கணேஷ் என்பவர் தூத்துக்குடியில் கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த காரை தனது பெயருக்கு சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாற்றம் செய்துள்ளார். அந்த காரை சிவகங்கையில் உள்ள அவரது குடும்பத்தினர், முத்து கணேஷ் வெளியூரில் பணிபுரிவதால் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கடந்தவாரம் கன்னியாகுமரியை அடுத்த அழகாபுரத்தில் வசித்து வரும் முத்து துரை என்பவர் இந்த காரை விலைக்கு வாங்கியுள்ளார். அதன் பின்னர் தூத்துக்குடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அவர் அந்த காரை தன்னுடைய பெயருக்கு மாற்றம் செய்வதற்காக சென்றுள்ளார்.
சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அங்கு அவர் குறிப்பிட்ட கார் நம்பர் மாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து சிவகங்கையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அவர்கள் தாங்கள் விலைக்கு வாங்கிய கார் அதனுடைய ஆர்.சி. புத்தகம் ஆகியவைகளுடன் வந்து விசாரித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கார் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை கொண்டு வரச் சொல்லி வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாண் குமார் அவைகளை வாங்கி பார்த்துள்ளார்.
அப்போது அந்த இரண்டு கார்களும் ஒரே நிறம், ஒரே கார் நிறுவனத்தை சேர்ந்தது என்றும், உமாதேவி என்ற உரிமையாளரின் பெயர் ஆகியவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்தது. காரில் உள்ள சேஸ் மற்றும் என்ஜின் ஆகியவைகளும், நம்பரும் ஒரே மாதிரியாக இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதில் உண்மையான கார் எது என்று தெரியாமல் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாண்குமார் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் இரண்டு கார்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.