கஜா புயலின் போது காரைக்காலில் 2 ஆண்டுகளாக தரை தட்டி நிற்கும் கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
காரைக்கால் மாவட்டம், மேலவாஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் துறைமுகத்திற்கு சொந்தமான, தூர்வாரும் பணிக்காக மும்பையிலிருந்து வீரா பிரேம் என்ற கப்பல் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காரைக்கால் வந்தது. தூர்வாரும் பணி முடிந்து கப்பல் மும்பைக்கு புறப்பட்டது. அப்போது கஜா புயலில் சிக்கிய கப்பல் மேலவாஞ்சூர் கடலில் தரைதட்டி நின்றது. கேப்டன் உள்ளிட்ட 7 பேர் பல நாட்கள் கப்பலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.
உடனே கப்பலை அப்புறப் படுத்த முடியாது என்று தெரிந்த பிறகு கப்பலில் உள்ள அனைவரும் வேறு கப்பல்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் மும்பையில் உள்ள கப்பல் நிறுவன அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை காரைக்காலுக்கு வந்து தரை தட்டிய கப்பலை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முயற்சிகளில் பயன் அளிக்காததால் கப்பலை உடைத்து எடுக்கும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கப்பளை உடைக்கும் போது அதில் உள்ள இரசாயனப் பொருள்கள், எண்ணெய் மற்றும் கழிவு பொருட்கள் கடல் நீரில் கலந்த கடல் நீர் மாசு அடைவதுடன், மீன்வளம் பாதிக்கும் என்பதால் இதற்காக மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கேயே நின்று உள்ளது. தற்போது நிவர் உருவாகியிருப்பதால் புயல் காற்றில் கப்பல் சேதம் ஆனால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என்பதால் கப்பல் அங்கிருந்து அப்புறப்படுத்த அம்மாவட்ட நிர்வாகத்திற்கு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று அர்ஜுன் சர்மா, நேற்று அதிகாரிகள், கடலோரப் படை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தபோது கடல்வளம் கிராம மக்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் கப்பலை அப்புறப்படுத்த ஆலோசனை மேற்கொண்டார். நிவர் புயல் கரையை கடந்தவுடன் தரை தட்டிய கப்பலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.