விழுப்புரத்தில் கணவன் சந்தேகம் கொண்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாட்டை பகுதியில் ராஜாராமன் மகள் சரண்யா(31) என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் கலாநிதி என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களாக குழந்தைகள் இல்லாத நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. அதிலிருந்து கலாநிதி, தனது மனைவியை இந்த குழந்தைகள் எனக்கு பிறந்த குழந்தைகள் இல்லை என்று சந்தேகப்பட்டு சண்டையிட்டுள்ளார். அதற்கு சரண்யாவின் மாமனார் கண்ணன் மற்றும் மாமியார் வசந்தா ஆகியோரும் உடந்தையாக இருந்து சரண்யாவை கடுமையாக திட்டியுள்ளனர்.
அதனால் மிகவும் மனமுடைந்த சரண்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். அதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரண்யாவை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி சரண்யாவின் அண்ணன் அருண், வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் கலாநிதி, கண்ணன் மற்றும் வசந்தா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.