நான்கு பிள்ளைகளைப் பெற்று இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியான பெண் சீருடை அணிந்து பள்ளி சென்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலயா மாநிலத்தில் உள்ள ரிபோய் மாவட்டத்திலுள்ள உம்ஸ்னிங் லுமும்பி கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதாகும் லாகிண்டியூ சியெம்லீ. சிறுவயதில் கணக்கு பாடம் கடினமாக இருந்ததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். அதன் பிறகு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து நான்கு குழந்தைகளை பெற்றுள்ளார். ஆனாலும் இல்லற வாழ்க்கை இவர் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. தனியொரு ஆளாக இருந்து நான்கு குழந்தைகளையும் வளர்த்து, அவர்களை படிக்க வைத்துள்ளார். பிள்ளைகள் வளர்த்து 26 ஆண்டுகளுக்கு பிறகு பாதியில் நிறுத்திய பள்ளிப்படிப்பை தொடரும் ஆசை லாகிண்டியூவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக 2015-ம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓப்பன் ஸ்கூலிங் எனும் திறந்தவெளிப் பள்ளியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்து 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதால் அது உயர்கல்வியை தொடரும் ஆசையை தூண்டியுள்ளது. இருந்தாலும் உயர்கல்வி படிப்பிற்கு 12-ம் வகுப்பு தேவையானது என்பதால் பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக சென்று படிக்க முடிவு செய்து கல்வி அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று தனது கிராமத்தில் உள்ள பள்ளியில் மேல்நிலைக்கல்விபயில சேர்ந்துள்ளார். தாய்மொழியான காசி, அரசியல் அறிவியல், பொருளாதாரம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடத்திட்டத்தை தேர்வு செய்து மற்ற மாணவர்களை போன்றே நேர்த்தியாக சீருடை அணிந்து பள்ளிக்கூடம் சென்று படிப்பை தொடர்ந்திருக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில் “கணக்கு பாடத்தை புரிந்து கொள்வது எனக்கும் மிகவும் கடினமாக இருந்தது. அதனால் சிறு வயதிலேயே பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். பிற்காலத்தில் மழலை பள்ளி குழந் தைகளை கவனித்து கொள்ளும் வேலை எனக்கு கிடைத்தது. அது மீண்டும் படிப்பை தொடர்வதற்கு தொடக்கமாக அமைந்தது. பிள்ளைகளையும் கவனிக்க வேண்டியிருந்ததால் உடனடியாக முடிவு எடுக்க முடியவில்லை. ஒருவழியாக போராடி 2015-ம் ஆண்டு தொலை தூர கல்வியில் சேர்ந்தேன். அங்கு கணித பாடம் சேர்க்கப்படாமல் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தேன். கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்றேன். 12-ம் வகுப்பு மிகவும் முக்கியமானது என்பதால் தான் பள்ளியில் சேர்ந்து படித்தேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானபோது லாகிண்டியூ தேர்ச்சி பெற்றுவிட்டார். இது பற்றி அவர் கூறுகையில், “நான் மூன்றாம் கிரேடில்தான் தேர்ச்சி பெற்றிருக்கி றேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு பிடித்தமான காசி மொழி யில் இலக்கியம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை நான் நன் றாக அறிந்துள்ளேன். கல்வி இல்லையென்றால் எதுவுமில்லை என்று லாகிண்டியூ கூறினார். இவரை பற்றி அந்த பள்ளி முதல்வர் கூறுகையில், “எங்களது திறந்தவெளிப் பள்ளியில் திருமணம் முடிந்தவர்கள், 30 வயதை கடந்தவர்கள் கூட படிக்கிறார்கள். ஆனால் 50 வயதில் ஒருவர் உற்சாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் வந்து படிப்பது அரிதானது. அவரை பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்” என்கிறார், அந்த பள்ளியின் முதல்வர் லாரன்ஸ்.
லாகிண்டியூவுடன் படித்த மாணவர்கள் அவரை அம்மா என்றே அழைத்துள்ளனர். நெருங்கி பழகவும் செய்துள்ளனர். அவர்களுடன் நடனம், பாட்டு, சுற்றுலா என பள்ளிக்கால நிறைவேறாத ஆசைகள் எல்லாவற்றையும் லாகிண்டியூ பூர்த்தி செய்துள்ளார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தபோது இவரது மகள்களும் தாயின் கல்விக்கு உதவி செய்துள்ளார்கள். பலநாட்களாக இரவு நெடுநேரம் கண்விழித்து படித்து தேர்ச்சி பெற்றுள்ளார், மேகாலயா பெண் லாகிண்டியூ.