ராமநாதபுரத்தில் மலற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை இரண்டு நாள் மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா உசிலங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கூரான்கோட்டை கிராமத்தில் மலற்றாற்றின் குறுக்கே 8 தடுப்பணைகள் தலா 9 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் கட்டப்பட்டன. இந்நிலையில் தொடர் மழையால் மலற்றாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தடுப்பணைகளில் ஒன்றில் மண் மற்றும் கல் வெளியே தெரிந்து தண்ணீர் வெளியேறும் பாதை பக்கவாட்டு சுவர்கள் விழுந்து மோசமான நிலையில் உள்ளது.
இரண்டு நாள் மழைக்கே தண்ணீரை தாக்குப் பிடிக்காமல் முற்றிலும் தடுப்பணை சேதமடைந்து பயன்படாத வகையில் உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.