இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வன்முறை காரணமாக திருமணநாள் ஒரு படுகொலை நாளாக மாறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணி அளவில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினரின் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கும் செய்தியில் நைஜீரியா kaura மாவட்டத்தின் kukum- daji கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நடந்த திருமண விருந்தை குறிபார்த்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்தியவர்கள் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் திங்கள்கிழமை அன்று தெரிவித்துள்ளனர்.
திருமண விருந்தில் பங்கேற்றவர்களில் 18 பேர் கொல்லப்பட்டு, 30 பேர் காயமடைந்துள்ளனர். தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் என்று மாவட்ட நிர்வாகத் தலைவர் கூறியுள்ளார். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று உறுதியாக தெரியவில்லை இருந்தாலும் இப்பகுதியில் இஸ்லாமிய புலானி மேய்ப்பவர்களுக்கும்
கிறிஸ்தவ விவசாயி களுக்கும் இடையே கொடிய வன்முறை நடந்து வருகிறது. மேய்ச்சல் மற்றும் நீர் உரிமைகள் தொடர்பாக விவசாயிகளுக்கும் மேய்ப்பவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த இந்த மோதலால் முக்கியமாக கிறிஸ்தவர்களின் கடுனா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.