கோவை அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் கை குப்பை தொட்டியில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை துடியலூர் அருகே வி.கே.எல் நகர் பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பை தொட்டியில் குப்பைகளை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது, தொட்டியில் இருந்து எடுத்து லாரியில் போடப்பட்ட பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது 2 துண்டுகளான துண்டிக்கப்பட்ட ஆணின் கை ஒன்று கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கு கிடந்த கையை கைப்பற்றி ஆய்வு செய்த போது 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை என தெரிய வந்தது. உடனடியாக 10 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை விரைந்து பிடிக்குமாறு காவல்துறைக்கு எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.