வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள நான்கு வழிச்சாலை பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியில் இருக்கும் தெருவில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் வாலிபர்கள் இரவு நேரத்தில் நான்கு வழி சாலை பணி நடைபெறும் பகுதியில் வைத்து மது குடிப்பது வழக்கம். நேற்று இரவு திடீரென அந்த இடத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் தப்பி ஓடினர். அப்போது பொதுமக்கள் அவர்களை துரத்தி சென்றனர். அதில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிவிட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் முக்கலம்பாட்டை பகுதியை சேர்ந்த அசோக்(25) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் கூறியதாவது, மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.