மகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமூர்த்தி இறந்துவிட்டதால் தனலட்சுமி மனநிலை சரியில்லாத தனது மகள் சுகன்யாவுடன் வசித்து வந்துள்ளார். தனலட்சுமியின் மகனான சசிகுமார் என்பவருக்கு திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சசிகுமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தனலட்சுமியின் வீட்டிற்கு சென்ற குடுகுடுப்பைக்காரர் வீட்டிலிருக்கும் தோஷத்திற்கு பரிகாரம் செய்யவில்லை என்றால் கை, கால்கள் செயல்படாமல் போய்விடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் குடுகுடுப்பைக்காரர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் எனவும் கூறி விட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் தனது மகன் மற்றும் மகளின் வாழ்க்கையை நினைத்து தனலட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனலட்சுமி தனது மகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அவர் இறந்ததை உறுதிபடுத்திய பிறகு தனலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் மகளின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.