சேலம் மாநகராட்சியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகரில் பெரும்பாலான இடங்களில் இரவு 9 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திலும் பேருந்து ஏற்கனவே அறிவித்தபடி இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேரம் தவறி வந்த பயணிகள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்துள்ளனர். மேலும் காவல் துறையினர் ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து விடிய விடிய கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.