உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று உலகிலுள்ள அனைத்து மக்களையும் வாட்டி வதைக்கிறது. அதில் முதல் மற்றும் இரண்டாவது அலை கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்தன. இதனை தொடர்ந்து டெல்டா ப்ளஸ், ஒமைகிரான் பாதிப்புகளும் அடுத்தடுத்து பரவியது. இதனால் நோயின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த போதிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக பெரும் அளவில் பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளன. இதனால் தொடர்ச்சியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
மேலும் உத்தரபிரதேசத்தில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 20 லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை பாதிப்படைந்துள்ளனர். மேலும் 23 ஆயிரத்து 424 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு நீக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது என உத்தரப்பிரதேச கூடுதல் முதன்மை செயலாளர் அவனீஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.