காவலாளிகளை குறி வைத்துக் கொள்ளும் சைக்கோ கொலையாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் இரவு பணியில் இருந்த காவலாளிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் 3 காவலாளிகளையும் ஒரே நபர் தான் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். அதோடு காவல்துறையினரின் சந்தேகப் பிடியில் இருக்கும் கொலையாளியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் மிஸ்ரா போபால் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் அனைத்து காவல்துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் பணியில் இருக்கும் காவலாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். அதன் பிறகு கொலை சம்பவம் குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒரு தொழிற்சாலையில் இரவு நேர பணியில் இருந்த கல்யாண் லோதி (50) என்ற காவலாளி தலையில் சுத்தியலால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஆகஸ்ட் 28 மற்றும் 29-க்கு இடைப்பட்ட இரவில் கொல்லப்பட்டுள்ளார்.
அதன் பின் ஒரு கல்லூரியில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்த ஷம்பு நாராயணன் துபே (60) என்ற காவலாளி தலையில் கல்லால் கொடூரமான முறையில் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஆகஸ்ட் 29 மற்றும் 30-க்கு இடைப்பட்ட இரவில் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து மங்கள் அகிர்வார் என்ற காவலாளியை கட்டையால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இவர் ஆகஸ்ட் 30 மற்றும் 31 க்கு இடைப்பட்ட தேதிகளில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைகளை ஒரு சைக்கோ கொலையாளி தான் செய்துள்ளார் என்று கூற முடியாது. மேலும் கொலை சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.