பெரு நாட்டில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பெரு நாடும் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது. இருந்தாலும் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற இரவு நேர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள லாஸ் ஆலிவோஸ் மாவட்டத்தில் தாமஸ் ரெஸ்டோபர் என்ற இரவு விடுதியில் அரசு தடையை மீறி செயல்பட்டு கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த விடுதியில் இருந்த அனைவரும் தப்பி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குமிங்கும் ஓடினர். அந்த விடுதியில் 120 க்கும் அதிகமானவர்கள் இருந்ததால், அனைவரும் ஒரே வாசல் வழியாக வெளியே செல்ல முயற்சி செய்துள்ளனர். அதனால் வாசல் பகுதியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அச்சமயத்தில் காவல்துறையினரும் அங்கிருந்தவர்களை விரட்டி அடித்ததால், பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அந்தக் கூட்ட நெரிசலில் பலரும் சிக்கிக்கொண்டு தவித்தனர். மேலும் சிலர் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்தனர்.
அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியில் இருந்த பலரும் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், 23 பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு கேளிக்கை விடுதி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விடுதி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.