இங்கிலாந்தில் இரவு நேர நிகழ்ச்சிக்கு பிரபலமான இடத்தில் நேற்று திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் உள்ள ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடம் இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமானது. அங்கு நேற்று இரவு திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் காயமடைந்துள்ளனர். இருந்தாலும் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பர்மிங்காம் சிட்டி சென்டரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளதாக எங்களுக்கு நள்ளிரவு 12.30 மணி அளவில் தகவல் கிடைத்தது. தகவலறிந்து நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சிலர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்து கிடந்தனர். எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனால் அந்த தகவலை நாங்கள் வெளிப்படையாக சொல்ல இயலாது. காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதில் அனைத்து அவசர சேவை அமைப்புகளுடன் இணைந்து நாங்களும் பணியாற்றி கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி இந்த தாக்குதல் மிகப்பெரிய சம்பவம் என்பதால் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்ன நடந்தது என்பதை கூறுவதற்கு எங்களுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். இந்த தாக்குதலால் குறிப்பிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.