சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ஹோட்டல் அருகில் இரவு பணிக்கு போக IT பெண் ஊழியர்கள் 2 பேர் கம்பெனி வாகனத்திற்காகக் காத்திருந்தனர். அப்போது ஹூண்டாய் காரில்வந்த போதை ஆசாமிகள் 3 பேர் அந்த பெண்களிடம் தகராறு செய்திருக்கின்றனர். அதனை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணின் விலையுயர்ந்த செல்போனை பிடுங்கி கீழேபோட்டு உடைத்திருக்கின்றனர். இந்நிலையில் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிப்போன இளம்பெண்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. இதனிடையே அங்கு நின்று இருந்த இன்னொரு பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்குக் கால் செய்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு பிரபாகரன் என்ற காவலர் விரைந்து வந்து அங்கு புகை பிடித்து கொண்டிருந்த 3 இளைஞர்களையும் விசாரித்திருக்கிறார். அந்த விசாரணையின்போது அடாவடித் தனமாக பதில் அளித்தவர்களைக் காவலர் அதட்டினார். அப்போது அவர்கள் காவலரையும் தாக்கியிருக்கின்றனர். அதன்பின் அவர்களின் அட்டகாசத்தை வீடியோ எடுக்க முயன்றபோது, காவலரின் செல்போனையும் பிடுங்கி உடைத்திருக்கின்றனர். இரவுநேரத்தில் ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள சமயத்தில் அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பெண்களின் கம்பெனி கார் வர, அவர்கள் அதில் ஏறி சென்றனர். பின் போதை ஆசாமிகளும் அவர்கள் வந்த காரை எடுத்துகொண்டு அங்கிருந்து தப்பித்தனர்.
அதன்பின் காவலர் பிரபாகரன் கொடுத்த தனிஅறிக்கையின் பேரில் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பலம் பொருந்திய காவலர்களை வைத்து தனிப்படை அமைத்தார். அந்த போதை ஆசாமிகள் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை துவங்கப்பட்டது. அப்போது அந்த கார் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அத்துடன் அதனை டெலிவரிக்கு கொடுத்திருப்பதும், பிரபு என்பவர் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனை அறிந்த காவல்துறையினர் பிரபுவை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் பிரபுவுடன் வந்த சூர்யா, சிவகுமார் ஆகிய இவரும் வசமாக சிக்கி கொண்டனர். அடுத்ததாக 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.