தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் இரண்டு வாரம் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்த வியாபாரிகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதியளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 7 நுழைவாயிலில் 3 நுழைவாயிலில் மட்டுமே வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் நிரந்தரமாக இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில்லறை வியாபாரிகள் கூடுதலாக விற்பனைக்கான இடங்கள் அமைத்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் செய்ய உத்தரவிட்டுள்ளது.