திம்பம் மலைப்பாதை இரவு நேர போக்குவரத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் காய்கறி வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் இருக்கின்றன. இந்த 10 வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் இருக்கின்றன. தமிழகம் – கர்நாடக மாநிலத்தை இணைக்கின்ற முக்கிய சாலையாக இது இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு இருக்கின்ற வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியேறி அங்கு இருக்கும் திம்பம் மலைப்பாதையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
இவ்வாறு அந்த மலைப்பாதையில் இரவு நேரங்களில் செல்லும் வனவிலங்குகள் அந்த வழியாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. இதையடுத்து திம்பம் மலைப்பாதையில் கடந்த 10 ஆம் தேதி முதல் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர வாகன போக்குவரத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இ ந்த நிலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக சொல்லபடுகிறது . தாளவாடி விவசாயிகள் மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதி விவசாயிகள் கூறுகையில், தாளவாடி மற்றும் அதன் சுற்றி உள்ள நூறுக்கு மேற்பட்ட பகுதியில் முக்கிய தொழிலே விவசாயம். அதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் ஆகிய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்குகிறது.
தாளவாடி மற்றும் அதன் எல்லையில் உள்ள கர்நாடக மாநில விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களான தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், காலிபிளவர், போன்ற காய்கறிகளை வாகனங்கள் மூலம் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம், கோபி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்க்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது உயர்நீதிமன்றம் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளதால் காய்கறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
குறிப்பாக சாம்ராஜ் நகர், கொள்ளேகால், குண்டல்பேட் பகுதியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு அனுப்பப்படும் காய்கறி வண்டிகள் தாளவாடியை அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலேயே காவல்துறையினர் நிறுத்துகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் காய்கறிகளை கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவிகிறது.
காலம் தாமதமாக காய்கறிகளை கொண்டு போய் விற்பனை செய்வதால், அதற்கு சரியான உரிய விலை கிடைக்காது . விவசாயிகள் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே திம்பம் மலைப்பாதையில் இரவு 10 மணி வரை மட்டும் அத்தியாவசிய பொருளான காய்கறிகளை ஏற்றி செல்லும் அனைத்து வாகனம் செல்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை வைத்தனர்.