கோவை மாவட்டத்தில் உள்ள மருத மலை பகுதியில் இருந்து தடாகம் அனுபவி சுப்பிரமணியர் கோவில் வரையில் உள்ள மலையைச் சுற்றியுள்ள வனப் பகுதியில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மருதமலை பகுதியில் சிறுத்தைகள் கடந்து செல்வது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் பகுதியில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று கடந்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சி தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாக வனத்துறை குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் கோவில் நிர்வாகத்தினர் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது தொடர்பாக வனத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அங்கு வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மருதமலை கோவிலுக்கு இரவு 7 மணிக்கு மேல் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.