மியான்மரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பல்வேறு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அந்நாட்டு ராணுவம் அதிக பாதுகாப்பு படையினரை கொண்டு போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக மக்களின் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியுள்ளனர். இதனை கண்டித்து பல உலக நாட்டு தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கை தலைவர் போரெல் கூறும்போது “இராணுவ அதிகாரிகள் பொதுமக்களுக்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், மக்கள் தங்களது சுதந்திரத்தை வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்” எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற செயலாளர் பிளிங்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் எப்போதும் மியான்மர் மக்களின் பக்கம் தான் எனவும், அனைத்து நாடுகளும் தங்களின் ஆதரவை மியான்மர் மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனவும்” கருத்து தெரிவித்துள்ளார்.