சிவகங்கையில் கிராம மக்கள் காரைக்குடி-மேலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் காரைக்குடியிலிருந்து மேலூர் பகுதி வரை பைபாஸ் சாலை அமைப்பதற்காக சர்வே அளக்கப்பட்டு பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஏற்கனவே திருச்சி-ராமேஸ்வரம் பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலை துறையினர் அப்பகுதியில் உள்ள மரங்கள் நீக்குவதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் பாரதக்குடி பகுதி வழியாக பைபாஸ் சாலை சென்றால் பெரும்பாலான விவசாய நிலங்கள், வீடுகள், கடைகள் ஆகியவை பறிபோகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில மாதங்களுக்கு முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மீண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக இந்த கிராம மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பாதரக்குடி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குன்றக்குடி காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராம மக்கள், எங்கள் கிராமம் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டால் கண்மாய்கள், வீடுகள், மற்றும் விவசாய நிலங்கள் ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்படும். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பைபாஸ் சாலையை வேறு வழிக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.