அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரயில்வே என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடளை அடுத்துள்ள மயிலபுரத்தில் ஜோதிபாசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ரயில்வே அலுவலகத்தில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிபாசு அவரது சொந்த ஊரான நெல்லைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் சேலத்திற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு நாமக்கல் மாவட்டம் ஓவியம் பாளையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு பாலத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஜோதிபாசு பின்னால் வந்த ஒரு வாகனம் திடீரென இவரது இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு வேகமாக நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜோதிபாசு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஜோதிபாசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜோதிபாசு இருசக்கர வாகனம் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.