வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் மேல வீதியில் வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளரான சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல வேலை முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளனர். அதன்பின் அவரிடமிருந்த ரூ.5,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சந்திரசேகரன் நாகூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகிய காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கார்த்திகேயன் உட்பட 2 நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கார்த்திகேயனை கைது செய்துள்ளனர். மேலும் தப்பித்து சென்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.