வடஇந்தியாவில் இந்து மதத்தினரின் புத்தாண்டு தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் கருவ்லி மாவட்டத்தில் இந்து மதத்தினர் சிலர் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பைக் பேரணி மேற்கொண்டனர். அதன்படி காவிக் கொடிகளுடன் கருவ்லி நகரில் பைக்கில் ஊர்வலமாக சென்றனர். அப்போது இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி அருகேயுள்ள இஸ்லாமிய மதவழிப்பாட்டு தளம் அருகே வந்தது. இந்நிலையில் இந்து மதத்தினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தோடு, ஸ்பீக்கரில் பாடல்களை இசைத்தவாறு இஸ்லாமிய மதவழிபாட்டுத்தளம் அமைந்துள்ள பகுதியை கடக்க முயற்சி செய்தனர். இதற்கிடையில் அப்பேரணியில் கலந்துகொண்வர்கள் மீது அப்பகுதியில் இருந்த வீடுகளின் மொட்டை மாடிகளிலிருந்து சிலர் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இருதரப்பினர் இடையில் மோதல் ஏற்பட்டு அது வன்முறையாக மாறியது. அதன்பின் பைக்குகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் கருவ்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 35 பேர் பலத்த காயமடைந்தனர். அத்துடன் வன்முறை குறித்து இதுவரையிலும் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானதால் வன்முறை பரவாமல் இருக்க கருவ்லியில் இணையதளசேவை துண்டிக்கப்பட்டது. இதனிடையில் இந்த வன்முறை குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இருதரப்பினர் இடையில் ஏற்பட்ட மோதல் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.