கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன், தம்பி இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையத்தில் உள்ள சேரன் நகரில் வசித்து வருபவர் காளிதாஸ் (36). இவர் அந்தப் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகின்றார். இவருடைய கடையில் மூன்று பேர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த திருட்டில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே காவல்துறையினர் அந்த இரண்டு பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் 28 வயதுடைய கார்த்திக், 19 வயதுடைய கௌதம் ஆகிய 2 பேரும் காளிதாஸ் கடையில் செல்போன் திருடிய வழக்கில் தப்பி ஓடியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இரண்டு பேரும் அண்ணன், தம்பிகள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.