ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கவும் உடல் செயல்பாடுகள் என சொல்லப்படும் பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வாகனம் இல்லா போக்குவரத்தை மேம்படுத்துவதற்காகவும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னை பெருநகர மாநகராட்சி இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மூலம் அமைச்சர் மா சுப்பிரமணியன் அண்மையில் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையில் காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியின் நோக்கங்களாக பொதுமக்கள் இணைந்து விளையாடுவது நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, இசை கச்சேரி, இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கராத்தே, சிலம்பம், டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நாம் விரும்பும் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடலாம்.
அந்த வகையில் சென்னை அண்ணாநகரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து முதல்வர் ஸ்டாலின் டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடியும் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்துள்ளார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனக்கு கொரோனா வந்த போதும் பெரிதாக பாதிப்பு வராமல் போனதற்கு உடற்பயிற்சியே காரணம் எனவும் எனக்கு வயது 70 ஆகின்றது. ஆனால் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன் தம்பி போல இருக்கின்றோம்.
வெளிநாடுகளுக்கு சென்றால் நீங்கள் இருவரும் அண்ணன் தம்பியா என கேட்கின்றார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள குழந்தைகள் பெற்றோர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் சாப்பிடும் முன் பசியோடு அமர வேண்டும். வயிறு முட்ட சாப்பிடக்கூடாது அதற்காக சாப்பிடாமலும் இருக்கக் கூடாது. என்ன சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் யோகா நடைப்பயிற்சி போன்றவற்றை செய்கின்றேன். உடல் நலத்தை பேணி பாதுகாத்து வந்தால் எந்த கவலை டென்ஷன் வந்தாலும் அதிலிருந்து விடுபடலாம். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.