இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகளை அகற்றினால் வாரண்டி கிடையாது என்று நுகர்வோரை எச்சரிக்கை வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன் பொது நல ஒன்றை வழக்கை தாக்கல் செய்தார். அதில் பின்னால் வரும் வாகனங்களை கண்காணிக்க இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இந்த கண்ணாடிகள் அகற்றப்படுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. எனவே கண்ணாடி இல்லாமல் இரு சக்கர வாகனங்கள் இயக்குவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இருசக்கர வாகனங்களில் கண்ணாடிகள் பொருத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை அகற்றினால், வாரண்டி கிடையாது என்று நுகர்வோரை எச்சரிக்கும்படி வாகன விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும். மேலும் புதிய வாரண்டி விதிகளை உருவாக்க வாகன உற்பத்தியாளர்களை அறிவுறுத்தலாம் என்று போக்குவரத்து துறை ஆணையருக்கு உத்தரவிட்டு நீதிபதி அந்த வழக்கை முடித்து வைத்தனர்.