இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள உழவர்பட்டியில் முருகேசன் (50) என்பவர் வசித்து வருகின்றார். கூலி தொழில் செய்து வரும் இவர் தனது மகன் ஜீவா (24) மற்றும் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு நன்செய் இடையாற்றில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பொய்யேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது நன்செய் இடையாற்றை சேர்ந்த 4 பேருக்கும் முருகேசன், ஜீவா, மணிகண்டன் ஆகியோருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த 4 கோழி சண்டைக்கு பயன்படுத்தும் கத்தியை வைத்து முருகேசன், ஜீவா, மணிகண்டன் ஆகிய 3 பேரை குத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த உழவர்பட்டி கிராம மக்கள் திரண்டு பரமத்திவேலூர் காமராஜர் சிலை மற்றும் கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து முருகேசன் உள்ளிட்ட 3 பேரை தாக்கிய நன்செய் இடையாற்றை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே ஊர் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.