வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் திருமலை பகுதியில் செல்வம் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரியமங்கலம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு காந்தி மார்க்கெட் பால்பண்ணை அருகே உள்ள மதுபான கடைக்கு செல்வம் நண்பர்களுடன் மது குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்த மதுபான கடை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் செல்வத்துக்கும், மது குடிக்க வந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த அந்த தரப்பை சேர்ந்த ஒரு வாலிபர், கத்தியால் செல்வத்தின் காது அருகே குத்தினார். இதனால் செல்வம் படுகாயமடைந்து சரிந்து கீழே விழுந்த உடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் செல்வத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் காஜாபேட்டையை சேர்ந்த விஜய்பாபு(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.