காவல்நிலையத்தின் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெள்ளாந்தியில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் 1992-ஆம் ஆண்டில் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தை வேறொரு நபர் தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரிய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது சம்பந்தமாக பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த நிலத்திலிருந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலர் மண்ணைத் தோண்டி டிராக்டரில் எடுத்து செல்வதாக மூதாட்டி பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் காவல்துறையினர் தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று மூதாட்டியிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி திடீரென காவல்நிலையத்தின் முன்பு நின்றுகொண்டு மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பாத்ததும் காவல்துறையினர் விரைவாக சென்று அந்த மூதாட்டியின் மீது தண்ணீரை ஊற்றி விட்டனர். இதனையடுத்து மூதாட்டி பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தெள்ளாந்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.