சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இங்கு தினமும் 25 டன்களுக்கும் மேல் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக நள்ளிரவு முதல் காய்கறிகள் வரத் தொடங்கி அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு வியாபாரிக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்த கடைக்காரர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
இதனை அடுத்து ஒரு கும்பல் சுமை தூக்கும் தொழிலாளர்களில் சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காலை 7 மணி வரை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமை தூக்கும் தொழிலாளர்களை சமாதானம் செய்த பிறகு காய்கறிகள் இறக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.