இறந்து போனதாக நினைத்த நபர் உயிருடன் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்ட செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற மூர்த்தி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூர்த்தியின் மகன்கள் பிரபுகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து தந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். கடந்த 31-ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக வாட்ஸப்பில் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி கார்த்தி சத்தியமங்கலம் சென்று பார்த்தபோது அந்த நபரின் முகம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. மேலும் தனது தந்தையை போன்ற தோற்றத்தில் இருந்ததால் இறந்துகிடந்த நபர் மூர்த்திதான் என்பதை கார்த்திக் முடிவு செய்து சடலத்தை எடுத்துச் சென்று முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்துவிட்டார். இந்நிலையில் இறந்து போனதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட மூர்த்தி நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பியதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மூர்த்தியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அடக்கம் செய்யப்பட்ட நபரின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து அவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.