போலியான பத்திரம் மூலம் இறந்தவரின் நிலத்தை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான கணபதி என்பவர் 30 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் கணபதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதற்காக முருகன் போலியான பத்திரம் தயாரித்துள்ளார். இந்நிலையில் மீனாட்சிபுரத்தில் வசிக்கும் செல்லம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்வதற்காக பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக ஆறுமுகசாமி, முத்துக்குமார், அழகுதுரை ஆகியோருடன் முருகன் சென்றுள்ளார்.
இதனை அடுத்து ஆதார் அட்டையில் பெயர் மாறுதல் செய்து முருகன் செல்லம் பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடுக்க முயன்றார். அப்போது கைரேகை வைக்கும் போது ஆதார் எண்ணின் உண்மையான பெயர் முருகன் என காட்டியதால் அதிர்ச்சி அடைந்த சார் பதிவாளர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து முருகன் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.