கேரள மாநிலமான கிளிகொல்லூரில் வினோத்(54) என்பவர் வசித்து வந்தார். இவர் கொரோனா தொற்று காரணமாக சமையல்காரர் வேலையை இழந்தார். இதையடுத்து சொந்த ஊர் வந்த வினோத் தனது மனைவி சுஜாதா, மகள்கள் கீது மற்றும் நீது ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் டிச 2-ஆம் தேதி வினோத் தன் மகள் கீதுவுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்தின் பின்புறம் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் தந்தை-மகள் இருவரும பலத்த காயம் அடைந்தனர்.
அதன்பின் அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட வினோத் மூளைச்சாவு அடைந்தார். இதனால் வினோத் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதால் அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தால் பலபேர் உயிர் வாழ்வார்கள் என்று மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
இதனை ஏற்று வினோத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி சம்மதம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து வினோத்தின் உடலில் இருந்து 8 உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து 8 உறுப்புகள் எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அதாவது இதயம், சிறுநீரகம், கைகள், தோள்பட்டை உள்பட 8 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் மூலம் வினோத் 7 பேரை வாழ வைக்க போகிறார். வினோத்தின் தோள்பட்டை உட்பட இரு கைகளும் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திற்கு தானம் செய்யப்பட்டன.