மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் காத்தாயி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த மூதாட்டி தினமும் அப்பகுதியில் இருக்கும் பெரிய ஏரி அருகில் தனது ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி பெரிய ஏரி நீர் வரத்து ஓடையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது மூதாட்டியின் இரு காதுகளும் அறுக்கப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் இருந்துள்ளது. மர்ம நபர்கள் மூதாட்டி அணிந்திருந்த தோடுகளை திருடி விட்டு அவரை கொலை செய்து தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.