புலி இரண்டு பசு மாடுகளை அடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சூஷம்பாடி பகுதியில் முகமது என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டில் செல்லமாக பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு பசுமாடுகள் இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மறுநாள் காலையில் முகமது பசுமாடுகளை தேடி சென்றுள்ளார்.
அப்போது தனியார் தேயிலை தோட்டத்தில் வைத்து புலி அடித்துக் கொன்றதால் இரண்டு பசு மாடுகளும் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.