தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காகமகன் ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு பறந்து வந்துள்ள நிகழ்வு பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். இவரது மகன் சசிகுமார் திருப்பூரில் தனியாக கம்பெனி வைத்து தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் தனது கம்பெனி வேலை தொடர்பாக சவுதி அரேபியாவிற்கு சென்றிருந்த சசிகுமாருக்கு தந்தை இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த அவர் அங்கிருந்து ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்கினார்.
அங்கிருந்து தென்னங்குடிக்கு காரில் சென்று தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி தந்தைக்கான இறுதி சடங்குகளை செய்தார் .பிறகு மாலை புதுக்கோட்டையில் இருந்து பெங்களூர் திரும்புவதற்கு ஹெலிகாப்டர் தயாரான நிலையில், வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று பகல் அந்த ஹெலிகாப்டர் புறப்படும் என்று கூறப்படுகின்றது. தன் தந்தையின் இறுதிச் சடங்கு காரியங்களை செய்வதற்காக மகன் ஹெலிகாப்டரில் வந்து நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.