ஒடிசாவில் இறந்துபோன தனது நாயின் பேனருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் துரித உணவு கடை நடத்தி வருபவர் சுஷாந்த் பிஸ்வால். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த பெண் நாய் குட்டி ஒன்றை எடுத்து வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு சம்பி என்று பெயர் வைத்துள்ளார். சுஷாந்த் தனது நாய்க்குட்டி சம்பிக்கு தினமும் பிரியாணி, பிஸ்கட் போன்ற உணவுகளை கொடுத்து அன்பாக கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 31ஆம் தேதி சம்பி திடீரென உயிரிழந்தது. 13 ஆண்டுகளாக தன்னுடன் இருந்த சம்பி திடீரென இறந்து போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உரிமையாளர் மிகவும் சோகத்தில் காணப்பட்டார்.
மேலும் நாய்க்குட்டி இறந்து பதினோராவது நாளில் சம்பிக்கு பேனர் வைத்து அந்த பேனருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்துள்ளார். மேலும் சம்பியின் பெயரால் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி வந்துள்ளார். இந்த புகைப்படம் இணையங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.