சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் நாயக். இவருக்கு லட்சுமிபாய் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா(16) என்ற மகள் இருந்தார். இவர் சிக்கமகளூருவிலுள்ள பசவனஹள்ளி அரசு பி.யூ. கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சென்ற 18-ஆம் தேதி ரக்ஷிதா கல்லூரிக்கு போக அங்குவந்த பேருந்தில் ஏற முயன்றார். எனினும் அதற்குள் டிரைவர் பேருந்தை இயக்கிவிட்டார். இதன் காரணமாக கால் தவறி பேருந்திலிருந்து தவறிவிழுந்த அவருக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனையடுத்து மாணவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் ரக்ஷிதா மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்தனர். இதுகுறித்து பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவித்து உள்ளனர். இதற்கு வரவேற்பு தெரிவித்த மருத்துவர்கள் மாணவி ரக்ஷிதாவின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக பிரித்தெடுக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை வாயிலாக ரக்ஷிதா உடலில் இருந்து கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உட்பட 9 உடல் உறுப்புகள் அகற்றப்பட்டது. இவற்றில் இதயம் பெங்களூருவுக்கும், மற்ற உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
ரக்ஷிதாவின் இதயம் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது. மற்ற உடல் உறுப்புகள் மணிப்பாலில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன் காரணமாக 9 பேர் மறுவாழ்வு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் ரக்ஷிதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உடலை உறவினர்கள் ரக்ஷிதா படித்த கல்லூரிக்கு கொண்டுசென்று அஞ்சலிக்காக வைத்தனர். பின் ரக்ஷிதாவின் உடல் அவரது சொந்தஊரான சோமனஹள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவ்வாறு ரக்ஷிதா இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்ததை நினைத்து பெருமைப்படுவதாக அவருடன் படித்த மாணவ-மாணவிகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.