அகமதாபாத்தில் இறந்த மகனிடம் அவரது தாய் போன் பேசும் சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து மருந்துகள், படுக்கைகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் பூனம் சோலங்கி என்ற பெண் ஒருவர் கையில் செல்போனை வைத்துக்கொண்டு தன் மகனிடம் வீடியோ கால் பேசி வருகிறார். அவர் மகனே நலமாக இருக்கிறாயா? உனக்கு ஒன்றும் ஆகாது என திரும்பத் திரும்ப கூறிவருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மகன் இறந்துள்ளார். இந்த தகவல் அந்த தாய்க்கும் தெரியும் என்றும் ஆனாலும் அவனை நினைத்து அடிக்கடி மருத்துவமனை வாசலில் இப்படி பேசி வருகிறார் எனவும் மகனின் இறப்பு அவரை மனநிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.