கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உப்பிலிபாளையம் பகுதியில் வசிக்கும் மாரியம்மாள்(80) என்ற மூதாட்டியும் கலந்து கொண்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு செல்லாது என அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்தபடி மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, எனது கணவர் சுந்தர்ராஜன், மகன் செந்தில்குமாரும் ஏற்கனவே இறந்துவிட்டனர். லாரி ஓட்டுநரான எனது மகன் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லாரி ஓட்டி சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வீடுகளை சுத்தம் செய்த போது செந்தில்குமார் பயன்படுத்திய பழைய பை ஒன்றை திறந்து பார்த்தேன்.
அதில் ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதனை கடைக்கு கொண்டு சென்ற போது கடைக்காரர்கள் ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என கூறினர். இந்த நோட்டுகளை மாற்ற முடியாமல் நான் மிகவும் சிரமப்படுகிறேன். இதனை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறிய அறிவுரைப்படி மனு கொடுப்பதற்காக இங்கு வந்தேன். நான் கணவர் மற்றும் மகனை இழந்து தனிமையில் மிகவும் சிரமப்படுகிறேன். இந்த பணத்தை மாற்றி கொடுத்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்ணீர் மல்க மூதாட்டி கலெக்டர் சமீரனை சந்தித்து ரூபாய் நோட்டுகளை காண்பித்தார். இது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.