உயிரியல் பூங்காவில் இறந்த மான் குட்டியின் உடலை அகற்றாமல் காகங்கள் கொத்தித் தின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மையப்பகுதியில் வ.உ.சி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இது பொதுமக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனால் பூங்கா பராமரிப்பு,போதிய இடவசதி இல்லை, உட்கட்டமைப்பு பணிகளில் தாமதம் உள்ளதாக கூறி மத்திய வன உயிரின பூங்கா ஆணையம் கடந்த மாதம் 5-ஆம் தேதி வ.உ.சி உயிரியல் பூங்காவின் அனுமதி ரத்து செய்யப்பட்டது. கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் பூங்கா நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் சில நாட்கள் முன்பு பிறந்த மான்குட்டி திடீரென இறந்ததை தொடர்ந்து அந்த மான் குட்டியின் உடலை பூங்கா நிர்வாகிகள் அகற்றாமல் அப்படியே விட்டதாக தெரிகிறது. அதனால் காகம் மற்றும் பறவைகள் மானின் உடலை கொத்தி தின்ற புகைப்படங்கள் வெளியாகியதை பார்த்த சமூக ஆர்வலர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தரப்பில் உறுகையில் மான்குட்டி குறை பிரசவம் என்பதால் இறந்தே பிறந்திருக்கிறது.
அதன்பின் மான் குட்டியின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் மான்குட்டி இறந்தது குறித்தும் அதன் உடல் அகற்றப்படாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அங்கு உள்ள ஊழியர்களுக்கு உத்தரவிட்டதோடு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார்.