நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழி வகையை செய்து தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது
திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய 24 வயது மகன் விக்னேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தீமிதி இறங்கிய போது அவர் கீழே விழுந்து காயமடைந்தார். இதனை அடுத்து அவரை அங்குள்ளவர்கள் உடனடியாக திருவாரூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் அந்த நேரத்தில் இல்லாததால் உடனடியாக அருகில் உள்ள நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 35 நாட்கள் அவரை அனுமதித்து உள் நோயாளியாக மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து விக்னேஷின் தந்தை அன்பழகன் மற்றும் தாய் மகனின் இறப்புக்கு காரணம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்..
இதற்கு மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்படும், பிரேத பரிசோதனை அறிக்கையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உடலைப் பெற்றுக் கொண்டு அடக்கமும் செய்துள்ளார்கள். இதையடுத்து தான் அவருடைய பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று இறப்பு சான்றிதழ் வேண்டும், அதற்கான சான்றிதழ் கொடுங்கள் என கேட்டபோது இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே காவல்நிலையத்தில் அளித்து விட்டோம், நீங்கள் அங்கு சென்று கேளுங்கள் என அலைக்களித்துள்ளனர்.
இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இறந்த விக்னேஷின் தந்தை அன்பழகன் வழக்கை தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் நீதிபதி சக்கரவர்த்தி மருத்துவமனை நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார். குறிப்பாக மருத்துவமனை நிர்வாகம் புகார்தாரின் மகனின் இறப்பை ஒத்துக்கொள்ளாமல் இருந்தது தெரியவந்துள்ளது. அதற்கான எந்த அறிவிப்பும் புகார்தாரருக்கு வழங்காமல் இருந்ததால் புகார் தாரதர் விக்னேஷின் இறப்பு சான்றிதழ்கள் பெறாமல் கஷ்டப்பட்டுள்ளார் என பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
இதனையடுத்து இறப்பு சான்றிதழ்களை வழங்காமல் அலைக்கழித்ததாகவும், அந்த பெற்றோருக்கு உரிய பதிலை அளிக்காத காரணத்தினால் நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ 3,10,000 வழங்க வேண்டும் எனவும், அது மட்டும் இல்லாமல் இறப்பு சான்றிதழை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்..