இறுக்கமாக சீருடை அணிந்திருந்ததாக கூறி ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உதயா நகரில் கலாதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான மிதுன் கணபதி சக்தி ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு சீருடை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மிதுன் வீட்டிற்கு சென்று சீருடையை அணிந்து பார்த்த போது அது பெரிதாக இருந்துள்ளது. இதனால் சீருடையை தனது தாயாரிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து தருமாறு மிதுன் கூறியுள்ளார். அதன்பின் அந்த சட்டையை அணிந்துகொண்டு மிதுன் பள்ளிக்கு சென்று பாடம் கவனித்துள்ளார். இந்நிலையில் வகுப்பறையில் வைத்து இயர்பியல் ஆசிரியரான சிவ ரஞ்சித் என்பவர் எதற்காக சட்டையை இறுக்கமாக அணிந்துள்ளாய் எனக்கூறி மிதுனை குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் அலறித் துடித்த மிதுனின் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர். இதில் மிதுனுக்கு முதுகு, கை, காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு விரைந்து சென்று அவரை வீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிவ ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.