தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் உள்ள காந்திநகரில் மூர்த்தி, அனுசியா தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அனுசியா அய்யம்பேட்டையில் உள்ள பேரூர் பகுதியில் தி.மு.க துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அனுசியா நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 வது வார்டில் தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது இறுதிகட்ட பிரச்சாரத்தின் போது அனுசியா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கட்சி தொண்டர்கள் உடனே அனுசியாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அனுசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் அனுசியாவின் உடல் அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அனுஷசியாவின் மரணம் குறித்து பேரூராட்சிக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 9 வது வார்டு உள்ளாட்சி தேர்தலை தேர்தல் அதிகாரி ராஜசேகர் ஒத்திவைத்துள்ளார்.