Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் திடீரென எழுந்த சிறுமி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. மீண்டும் நேர்ந்த சோகம்….!!!!

உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்த நிலையில், சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் இறந்தார்.

கடந்த 17 ஆம் தேதி மெக்சிகோவில் இச்சம்பவம் நடந்தது. Camila Roxana Martinez Mendoza எனும் அச்சிறுமியின் தாயார் உள்ளூர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து விட்டதாகக் கூறியதாக குற்றம் சாட்டினார். மெக்ஸிகோவின் வில்லா டி ராமோஸ் நகரத்தில் வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சலை அனுபவித்த சிறுமி காமிலாவை அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு உள்ள குழந்தைகள் நல மருத்துவர் சிறுமியின் தாயார் மேரி ஜேன் மென்டோசாவிடம் சிறுமியை பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

ஆனால் அதே சமயத்தில் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்போது மருத்துவர் அவருக்கு பாராசிட்டமால் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி கமிலாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் மற்றொரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு அந்த மருத்துவர் ஒரு வித்தியாசமான மருந்தை பரிந்துரைத்ததோடு, குழந்தைக்கு பழங்கள் மற்றும் தண்ணீரைக் கொடுக்க பரிந்துரைத்துள்ளனர். எனினும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அதன்பின் குடும்பத்தினர் சிறுமியை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

இதற்கிடையில் மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு ஆக்ஸிஜனை செலுத்த நீண்டநேரம் எடுத்ததாக சிறுமியின் தாயார் குற்றம்சாட்டினார். அதனை தொடர்ந்து சிறுமிக்கு நரம்பு வழியாக மருந்துகளை செலுத்திய மருத்துவர்கள் 10 நிமிடங்களுக்குப் பின் அதனை அகற்றிவிட்டு, இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அப்போது சிறுமியின் இறப்புக்கு நீர்ச்சத்து குறைபாடுதான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்தநாள் இறுதிச் சடங்கு நடந்தபோது, ​​தன் மகளின் சவப்பெட்டியில் கண்ணாடிப் பலகை மர்மமான முறையில் மேகமூட்டமாக இருப்பதை தாய் மென்டோசா கவனித்தார். இதனிடையில் துக்கத்தில் இருந்தவர்கள் ஆரம்பத்தில் அவரது வார்த்தைகளை நிராகரித்தனர். அவரால் தன் குழந்தையின் இழப்பைத் தாங்க முடியவில்லை எனவும் அது அவருக்கு ஏற்பட்ட மாயத்தோற்றம் எனவும் கூறினர்.

எனினும் சிறுமியின் பாட்டி கமிலாவின் கண்கள் அசைவதைக் கண்டதோடு அதிர்ச்சியூட்டும் வகையில் அவருக்கு நாடித்துடிப்பு இருப்பதைக் கண்டு பிடித்தார். பின் சிறுமி மீண்டுமாக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிறுமியை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும்  சிறுமி மீண்டும் இறந்து விட்டதாக அறிவித்தனர். இம்முறை பெருமூளை வீக்கத்தால் (மூளை வீக்கம்) இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர் இறந்து விட்டதாக முதலில் அறிவித்த மருத்துவர்கள் மீது Mendoza தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளார். அதாவது மருத்துவர்கள் மீது தனக்கு எந்த வெறுப்புமே இல்லை. ஆனால் இது மீண்டும் நடைபெறாமல் இருக்க அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கூறினார். இவ்வழக்கில் சான் லூயிஸ் போடோசி மாநில அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்.

Categories

Tech |